கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள முனியப்பர் கோவிலில் 20 அடி நீள மலைப்பாம்பு பக்தர்களை பயமுறுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள தகரை காப்புக் காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற முனியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சின்னசேலம் பகுதியை சேர்ந்த மக்களும் , சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்களும் வந்து சாமியை வழிபட்டு செல்வார்கள். அதன்படி நேற்று முன் தினம் கோவிலுக்கு பக்தர்கள் வந்துள்ளனர். அப்போது கோவிலுக்கு அருகே 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சென்று கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதற்கிடையில் நேற்றும் இந்த கோயிலை சுற்றி மலைப்பாம்பு வந்துள்ளது. இத்தகவலை அறிந்த வனசரகர் கோவிந்தராஜ், வனவர் சின்னதுரை மணிகண்டன், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். அதன் பிறகு பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்தார்கள்.