சிறுபான்மையின மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தத் திட்டத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகையாகவும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, வாழ்க்கைத் தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டய படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பட்டய படிப்புகள் பயில்பவர்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித் தொகையாகவும் தொழிற்கல்வி பயில்வோருக்கு வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்கும் போது இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தனைகள் உள்ளடங்கிய விவரங்கள் அனைத்தும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இது தொடர்பான விவரங்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரடியாக சென்று தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பை மாணவர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.