இயற்கை உரத்துக்காக நாகையில் அறுவடை முடிந்த நிலங்களில் மேய்ச்சலுக்கு ஆடுகள் விடப்பட்டுள்ளன.
நாகை விவசாயிகள் நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடியை 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செய்வதற்கு தயாராகி வருகின்றனர். இதற்காக திருமருகல், நாகை, கீழ்வேளூர், திட்டச்சேரி, பாலையூர், கீழையூர் ஆகிய பகுதிகளில் அறுவடை முடிந்த விளைநிலங்களில் விவசாயிகள் உரமேற்ற செம்பறி ஆடு பட்டிகளை புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் களமிறக்கியுள்ளனர். அந்த செம்மறி ஆடுகள் அறுவடைக்குப்பின் வரப்புகள் மற்றும் வயல்களில் கிடைக்கும் வைக்கோல் மற்றும் பச்சை புல் பூண்டுகளை மேய்ந்து வருகின்றனர்.
சிறந்த இயற்கை உரமாக இந்த ஆடுகளின் கழிவு பயன்படுகிறது. கடைமடை பகுதியில் ஆடுகள் மேய்ச்சலுக்கு வயல்களில் விடப்பட்டுள்ளதால் இயற்கை உரம் இந்த வருடம் தாராளமாக கிடைக்கும். ஆடுகளின் கழிவு உரமாக பயன்படுவதால் அப்பகுதி விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கள் நிலங்களில் பட்டிப்போட்டு ஆடுகளை அடைத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளனர். அங்கு ஆடு மேய்ப்பவர்களின் சாப்பாடு செலவிற்கும் அவர்களே பணம் கொடுக்கின்றனர். இந்த இயற்கை உரத்தால் அதிக மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.