சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கையில் துணை ராணுவ படையினர் காவல்துறையினருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை,.மானாமதுரை, திருப்பத்தூர் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஆனால் முதல் நாளில் வேட்புமனுத் தாக்கல் யாரும் செய்யவில்லை. இந்நிலையில் லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்படும் பணத்தை கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் இருந்து சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் சிவகங்கை மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வருகை தந்துள்ளனர். அந்தந்த பகுதியில் காவல்துறையினருடன் சேர்ந்து துணை ராணுவ படையினரும் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மானாமதுரை-பரமக்குடி சாலை, சிவகங்கை-திருப்பத்தூர் பைபாஸ் சாலை, திருப்பத்தூர்-சிவகங்கை பைபாஸ் சாலை, திருப்புவனம்-பூவந்தி சாலை கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதிகளில் ஏற்கனவே துணை ராணுவ வீரர்கள் காவல் துறையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தற்போது வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.