ராஜஸ்தான் மாநிலத்தில் பாம்பை ஏவிவிட்டு மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு ஐகோர்ட் ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுனு மாவட்டத்தை சேர்ந்த அல்பனா என்பவர் சச்சின் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். சச்சின் ஒரு ராணுவ வீரர் என்பதால் தனது மனைவியை தாயார் வீட்டில் விட்டுவிட்டு அவர் பணிக்கு சென்றுவிட்டார். திருமணமான பிறகும் அல்பனா தனது முன்னாள் காதலனான மணிஷுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இது மாமியார் சுபோத் தேவிக்கு பிடிக்காததால் அவரை கண்டித்துள்ளார். இதன் காரணமாகவே மாமியாருக்கும் மருமகளுக்கும் தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்ட அல்பனா தனது முன்னாள் காதலன் மணிஷ மற்றும் அவரின் நண்பர் கிருஷ்ணகுமார் ஆகியோருடன் திட்டமிட்டு மாமியார் தூங்கும் போது அவரது படுக்கை அருகே கொடிய விஷம் கொண்ட பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியுள்ளனர் திட்டமிட்டபடியே 2018ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி மாமியாரை பாம்பை விட்டு கடிக்க வைத்தனர். பிறகு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் அவரின் மரணத்தில் சந்தேகம் இருந்த காரணத்தினால் போலீசார் அல்பனா செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது சுபோத் தேவி இறப்பதற்கு முதல்நாள் இரவு ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு தொடர்ந்து 50 தடவைக்கும் மேல் அழைப்பு செய்துள்ளார். இதை கண்டு சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை விசாரணை செய்ததில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து மருமகள் அல்பனா மற்றும் அவரது கள்ளக்காதலன் மணிஷ் மற்றும் நண்பர் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்து வருகிறார்கள். இவ்வழக்கில் மூவரும் புதிய முறையை பயன்படுத்தி கொலை செய்ய திட்டம் திட்டியதால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.