கள்ளக்காதல் விவகாரத்தில் பெயிண்டரை அடித்து கொலை செய்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கீழ் பூங்குருவி கிராமத்தில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கதிரேசனுக்கும், பாரதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் பெயிண்டரான ரகுபதி என்பவருக்கும், பாரதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்த கதிரேசன் தனது மனைவியை கண்டித்ததால் கோபமடைந்த பாரதி வீட்டை விட்டு வெளியேறி ரகுபதியுடன் தங்கி ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து ரகுபதியும், பாரதியும் ஒரு ஆட்டோவில் பையனப்பள்ளி பகுதியில் இருக்கும் முனியப்பன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கதிரேசனும் அவரது சகோதரர்களான சதீஷ், கேசவன். பாண்டுரங்கன் ஆகியோர் இணைந்து ஆட்டோவை வழிமறித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இரும்பு கம்பியால் ரகுபதியை சரமாரியாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகுபதியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த கேசவனை கைது செய்துள்ளனர். மேலும் கதிரேசன், சதீஷ், பாண்டுரங்கன் ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டனர். அதன்பிறகு நீதிமன்றத்தின் உத்தரவின்படி குற்றவாளிகள் 4 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.