பெற்ற குழந்தையை தாய் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே குளக்கட்சி கிராமத்தில் ஜகதீஷ்- கார்த்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஜகதீஷ் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சனா [3] என்ற மகளும் சரண் [1] என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் சரணுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகா கணவர் ஜகதீஷ்க்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த ஜகதீஷ் உடனே வீட்டிற்கு வந்து குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் சரண் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஜகதீஷ் கதறி அழுது கொண்டே குழந்தையை வீட்டிற்கு தூக்கி வந்தார். இந்த குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக அக்கம்பக்கத்தினர் பேசியுள்ளனர்.
இதுகுறித்து தக்கலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கார்த்திகாவிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது கார்த்திகா வீட்டிலிருந்த விஷ பொடியை சாப்பிட்டு குழந்தை இறந்திருக்கலாம் என கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் கார்த்திகாவை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மாயபுரம் பகுதியில் இருக்கும் ஒரு ஆலய திருவிழாவிற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கார்த்திகா குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த 25 வாலிபர் மீது கார்த்திகாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கார்த்திகா தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது என்பதை மறைத்து வாலிபருடன் பழகியுள்ளார். இவர்கள் 2 பேரும் தனியாக பல இடங்களில் சுற்றி உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
இந்நிலையில் வாலிபருக்கு கார்த்திகாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. உடனே வாலிபர் கார்த்திகாவிடம் திருமணமாகி குழந்தைகள் இருக்கும் பெண்ணுடன் என்னால் பழக முடியாது என கூறியுள்ளார். இதனால் தன்னுடைய கள்ளக்காதலுக்கு குழந்தைகள் தான் தடையாக இருக்கிறது என நினைத்த கார்த்திகா குழந்தைகளை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். எனவே சேமியாவில் விஷம் கலந்து சரணுக்கும், சஞ்சனாவுக்கு கொடுத்துள்ளார். இதனால் குழந்தை சரண் துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இந்நிலையில் குழந்தை சஞ்சனா உயிருக்கு போராடிய நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திகாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.