நாகர்கோவிலில் கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயற்சித்த மனைவி மற்றும் கூலிப்படையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள கேசவ திருப்பபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ். கடந்த வாரம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக அவரது மனைவி காயத்ரி கூறியதை அடுத்து உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் காயத்ரியை கூலிப்படை மூலம் தனது கணவரை கொல்ல முயன்றது தெரியவந்தது. இதை அடுத்து காயத்ரி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 2 பேர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காயத்ரியின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.