மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே காட்டுக்கொட்டாய் பகுதியில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரவேல் (26) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு குமாரவேல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவ படிப்புக்காக சேர்ந்தார். இவருடைய படிப்பு காலம் முடிவடைந்த நிலையில், குமாரவேல் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் அவரால் மருத்துவராக முடியவில்லை. இதனால் சொந்த ஊருக்கு திரும்பிய குமாரவேல் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகி, மனநல சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் குமாரவேல் தன்னுடைய தந்தையுடன் டிசியை வாங்குவதற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து நேற்று முன் தினம் நண்பர்களை சந்திப்பதற்காக மருத்துவ மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு குமாரவேல் சென்றுள்ளார். அப்போது கழிவறைக்கு சென்ற குமாரவேல் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் மற்றும் ஜெய்சங்கர் கழிவறைக்கு சென்ற போது குமாரவேல் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே குமாரவேலை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குமாரவேல் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.