கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கனியாமூர் கிராமசக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற 2000 மாணவ-மாணவிகள் தங்களுடைய பிறப்பு சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை கேட்டு விண்ணப்பித்து இருக்கின்றனர். இவர்களில் 180 மாணவ- மாணவிகள் வேறு பள்ளியில் படிக்கப் போவதாகவும், இதற்காக பள்ளி நிர்வாகத்தில் விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. கனியாமூர் கிராமசக்தி மெட்ரிகுலேஷன்பள்ளியில் சென்ற ஜூலை 17-ம் தேதியன்று வன்முறை சம்பவம் வெடித்தது.
அப்போது பள்ளி அடித்து நொறுக்கப்பட்டு அங்குள்ள உடைமைகள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இச்சம்பவங்களால் அந்த பள்ளியில் படித்துவந்த 3000-திற்கும் அதிகமான மாணவ-மாணவியர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அந்த பள்ளியில் பயின்றுவந்த மாணவர்கள் அனைவருடைய சான்றிதழ்கள் அனைத்தும் தீயில் எரிந்ததால் அவர்களுடைய அனைத்து சான்றிதழ்களையும் மீண்டுமாக வழங்க அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டது.
அந்த வகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷர்வன் குமாரும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என உறுதியளித்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதற்காக தனிஅலுவலகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதற்கென சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள அகிலா மற்றும் ராஜு போன்றோரது தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போதுவரை சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற 2000 மாணவ-மாணவிகள் தங்களுடைய சான்றிதழ்கள் வேண்டும் என்று விண்ணப்பித்து இருக்கின்றனர். இவற்றில் 180 மாணவ-மாணவிகள் வேறு பள்ளியில் படிக்கப் போவதாகவும் விண்ணப்பித்து இருக்கின்றனர். அவ்வாறு வேறு பள்ளியில் சென்று படிப்பதற்கு விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.