Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளியை சீரமைக்க அனுமதி வேண்டும்…. 10 நாளில் ஆட்சியர் முடிவு எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!!

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகம் பள்ளியை சீரமைக்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில் 10 நாளில் பரிசீலித்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் முடிவு எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த +2 மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளியில் மர்மமாக உயிரிழந்து கிடந்தார்.. இதையடுத்து இதற்கு நீதிகேட்டு 4 நாட்களாக நடைபெற்ற போராட்டம் 17ஆம் தேதி வன்முறையாக மாறியது.  இந்த வன்முறையில் பள்ளி முழுவதும் சேதப்படுத்தப்பட்டு பேருந்துகள், பள்ளியின் ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.. இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் பள்ளியை சீரமைக்க வேண்டும், அதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பள்ளியை நிர்வாகித்து வரும் அந்த அமைப்பு தொடரப்பட்ட வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அருகில் உள்ள பள்ளியில் நேரடி வகுப்புகளில் பங்கேற்று வருகிறார்கள். பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்கும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் பள்ளி தாளாளரின் மகன் மீது குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில் அது பற்றி விசாரணை நடைபெறுகிறது.

அதன்படி பள்ளியில் விசாரணைக்காக தடயங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே பள்ளி சீரமைப்பு பணிக்கு அனுமதிக்க கூடாது என்று தெரிவித்தார். பின்னர் இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி அப்துல் குத்தூஸ் பிறப்பித்த உத்தரவில், சீரமைக்க அனுமதி கேட்டு பள்ளி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் 10 நாட்களில் முடிவெடுக்க ஆட்சியருக்கு உத்தரவிட்டு முடித்து வைத்தார்.

Categories

Tech |