Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி போன்று இங்கேயும் கலவரம் ஏற்படுத்தனும்…. என்ஜினீயரிங் மாணவர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

கடலூர் மாவட்டம் தேவனாம் பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று காலை ரோந்துபணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சில்வர் பீச் கடற்கரை அருகில் 5 பேர் கொண்ட கும்பல் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அதாவது அவர்கள் வேப்பூர் மாணவி ஸ்ரீமதி கனியாமூர் சக்தி மெட்ரிக்பள்ளியில் இறந்தது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை போன்று, கடலூர் மாவட்டத்திலும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசினர். இதனை கேட்ட காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் 4 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து காவல்துறையினர் ஒருவரை மடக்கிபிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள புலியூரை சேர்ந்த விஸ்வலிங்கம் மகன் விஜய் என்ற விஜய்வளவன் (21) என்பதும், இவர் கடலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4வது ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கலவரத்தை போன்று கடலூர் சில்வர் பீச் அருகிலுள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரி முன்பும் கலவரத்தில் ஈடுபட வாட்ஸ்அப் குழு வாயிலாக இளைஞர்களை திரட்டியது தெரியவந்தது. பின் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அத்துடன் சில்வர் பீச்சுக்கு இளைஞர்கள் யாரும் போகாத அடிப்படையில் காவல்துறையினர் உப்பனாறு பாலம் அருகில் பலத்த சோதனை மேற்கொண்டனர். இதனால் சில்வர்பீச் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதுமட்டுமின்றி கல்லூரி சென்ற மாணவ-மாணவிகள் தங்களது அடையாள அட்டையை காண்பித்த பிறகே கல்லூரிக்கு போக அனுமதிக்கப்பட்டனர். பிற இளைஞர்கள் யாரையும் சில்வர்பீச்சுக்கு போக காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதேபோன்று மாவட்டம் முழுதும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Categories

Tech |