கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் இணைந்த நிலையில், அது கலவரமாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டதுடன், பஸ்கள், வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மாணவி இறப்பதற்கு முன்னர் எழுதியதாக ஒரு கடிதம் நேற்று வெளியாகியிருந்தது. அந்த கடிதத்தில் நான் நன்றாகத்தான் படிப்பேன். வேதியியல் பாடத்தில் நிறைய சமன்பாடுகள் உள்ளன. என்னால் அவற்றை படிக்க முடியவில்லை. அதனால் அந்த வேதியியல் ஆசிரியர் எனக்கு மிகவும் அழுத்தம் கொடுக்கிறார். ஒரு நாள் இந்த வேதியியல் ஆசிரியர், கணித ஆசிரியரிடம் நான் நன்றாகவே படிக்க மாட்டேன் என சொல்லியிருக்கிறார்.
அதனால் அவரும் எனக்கு மன அழுத்தம் தர ஆரம்பித்தார். விடுதியில் என்ன செய்கிறாய், படிக்க மாட்டாயா என இருவரும் என்னை மாறி மாறி திட்டுகிறார்கள். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து மற்ற பாட ஆசிரியர்களிடம் நான் சரியாக படிக்க மாட்டேன் என கூறி என்னை மன உளைச்சலுக்குள்ளாக்குகிறார்கள். நான் சரியாக படிப்பதில்லை என ஆங்கில ஆசிரியர் என்னிடம் வந்து கேட்கிறார். என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாந்தி மேடம் (பள்ளி தாளாளர்) உங்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை.
நான் ஹாஸ்டலுக்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆச்சு. எனவே இந்த ஆண்டு எனக்கு கட்டப்பட்ட அனைத்து கல்வி கட்டணத்தையும் விடுதி கட்டணம், புத்தக கட்டணத்தையும் எனது அம்மாவிடம் திருப்பி கொடுத்துவிடுங்கள். ப்ளீஸ் சாரி அம்மா, சாரி அப்பா என அந்த மாணவி எழுதியிருந்ததாக கடிதம் வெளியானது. இந்த நிலையில் அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து எங்கள் மகளின் கையெழுத்தே இல்லை என மாணவியின் பெற்றோர் மறுத்துள்ளனர்.