கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பயின்றுவந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி, சென்ற மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்படி சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறைச்சாலையில் அடைத்தனர்.
இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு இப்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் சென்ற வாரம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் ஜாமீன் கோரி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.