சென்னையில் நகைக்கடை உரிமையாளரின் மகன் கள்ளச்சாவி போட்டு 14 கிலோ நகையை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ராஜ்குமார் சோப்ரா என்பவரும் கீழ் பாகத்தை சேர்ந்த 45 வயதுடைய சுபாஷ் என்பவரும் இணைந்து சவுகார்பேட்டை என்எஸ்சிபோஸ் சாலை வீரப்பன் தெருவில் தங்க நகைகள் மொத்த வியாபாரம் செய்யும் கடையை நடத்தி வருகின்றனர். வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் கடையைத் திறந்து வியாபாரம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 21ஆம் தேதி வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். அதன் பிறகு மீண்டும் 25ஆம் தேதி கடையை திறந்து பார்த்தபோது, லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 14 கிலோ தங்க நகைகள் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து யானைக்கவுனி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். ஆனால் கடை மற்றும் லாக்கர் பூட்டுகள் உடைக்கப்பட்டு கள்ளச்சாவி போட்டு நகையை திருடி இருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அப்போது சம்பவம் நடந்த அன்று நகை கடை உரிமையாளர்களில் ஒருவரான சுபாஷ் மகனான 24 வயதுடைய ஹர்ஷ் போத்ரா என்பவர் பெரிய பையுடன் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். அவரை கண்டறிந்து விசாரணை நடத்தியதில் 14 கிலோ நகையை திருடியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் அதை சமாளிப்பதற்கு கள்ளச்சாவி போட்டு கடை மற்றும் லாக்கரை திறந்து நகையை திருடியதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்து 11 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.