கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி சரண் மாவட்டத்தில் உள்ள சப்ரா பகுதியில் பலர் ஒன்றாக சேர்ந்து கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது குடும்பத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
இது குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 213 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் காவல் நிலையத்திலிருந்து கிடைத்திருக்கலாம். இது போலீசாரின் அலட்சியத்தால் காணாமல் போனது. மேலும் மாயமான இந்த மூலப் பொருட்கள் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.