மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பூபர் பகுதியில் வசித்து வருபவர் பிரசாத் (40). இவருக்கு பிரீத்தி (35) என்ற மனைவியும் சமீரா (வயது 14), சமிக்ஷா (வயது 11) என 2 மகள்களும் இருக்கின்றனர். இதற்கிடையில் பிரசாத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனை பிரசாத்தின் மனைவி பிரீத்தி மற்றும் மகள்கள் கண்டித்து இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அப்பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி பிரீத்தி தன் கணவரை வலியுறுத்தி இருக்கிறார். இதன் காரணமாக கணவன் -மனைவி இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கள்ளத்தொடர்பை கண்டித்து அப்பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி பிரீத்தி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தன் கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பிரீத்திக்கும், பிரசாத்திற்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த பிரசாத் தன் மனைவி பிரீத்தி மற்றும் மகள்கள் சமீரா, சமிக்ஷா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். இவற்றில் பிரீத்தி மற்றும் 2 மகள்களும் பலத்த காயமடைந்தனர். மேலும் தீவைத்த பிரசாத்தின் உடலிலும் தீ பிடித்துள்ளது. தீபற்றி எரிந்த இவர்களின் அலறல் சத்தம்கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே விரைந்து வந்து அனைவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் கடுமையான தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட பிரீத்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். மகள்கள் சமீரா, சமிக்ஷா 90 % தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றனர். மனைவி மற்றும் மகள்களுக்கு தீவைத்த பிரசாத் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.