கள்ளத்தொடர்பை கைவிட சொன்னதால் கணவரை கொன்று உடலை வாழைத்தோப்பில் புதைத்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகில் சத்திரம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி ராஜசேகர்(47). இவருக்கு 38 வயதுடைய விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். ராஜசேகர் கடந்த 9 மாதத்திற்கு முன் காணாமல் போனார். ஆனால் விஜயலட்சுமி தனது கணவர் வெளியூர் சென்று இருப்பதாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ராஜசேகர் காணாமல் போன விவகாரத்தில் மர்மம் இருப்பதாக நடுவீரப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இத்தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் காவல்துறையினர் கடந்த 29ஆம் தேதி விஜயலட்சுமிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் விஜயலெட்சுமி கூறியதாவது, எனக்கும், கணவரின் நண்பர் எஸ். புதுக்குப்பத்தில் வசித்த மோகன்(33) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை அறிந்த ராஜசேகர் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு சொன்னார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த நான் இரும்பு கம்பியால் அடித்து ராஜசேகரை கொலை செய்துவிட்டேன்.
அதன் பின் கள்ளக்காதலன் மோகன் உதவியுடன் ராஜசேகரை வீட்டின் பின்புறத்தில் உள்ள வாழைத்தோப்பில் குழிதோண்டி புதைத்து விட்டேன்.இதுபற்றி யாரிடமும் கூறாமல் எனது குழந்தை, உறவினர், அக்கம்பக்கத்தினரிடம் ராஜசேகர் வெளியூர் சென்று விட்டதாக கூறினேன் என்று அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் கடந்த 29ஆம் தேதி விஜயலட்சுமியை வாழைத் தோப்புக்கு அழைத்துச்சென்று உடலை புதைத்த இடத்தை அடையாளம் காட்டச் சொன்னார்கள்.
அதன் பின் நேற்று முன்தினம் மதியம் தாசில்தார் சிவகார்த்தியன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், வருவாய் அலுவலர் மணிவண்ணன், கிராம நிர்வாக அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலையில் ராஜசேகரன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உள்ளது. அதன்பின் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மதுவர்தன், செல்வகுமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் ராஜசேகர் உடலை பிரேத பரிசோதனை செய்தார்கள்.
இதனையடுத்து விஜயலட்சுமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கின்ற மோகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.