கள்ளநோட்டு கொடுத்த முதியவரை பின்னால் ஓடி சென்று விரட்டி பிடித்த பெண்மணிக்கு போலீசார் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி பகுதியில் வசித்து வருபவர் உமா சந்திரா. இவர் அந்த பகுதியில் மளிகை கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். வழக்கம்போல வியாபாரம் செய்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது கூடல்புதூர் பகுதியை சேர்ந்த காதர் பாட்ஷா என்ற முதியவர் கடைக்கு வந்து மளிகை பொருட்களை வாங்கியுள்ளார். பின்னர் அவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு மீதி சில்லரை வாங்கி விட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து 500 ரூபாய் நோட்டை உமா பார்த்த போது அது கள்ள நோட்டு போல இருந்ததால் அவரை கூப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த முதியவர் பதில் எதுவும் கூறாமல் தப்பி ஓடியுள்ளார். இதனால் உமாவுக்கு அது கள்ள நோட்டு தான் என்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து உமா அவர் பின்னால் ஓடி விரட்டி சென்று முதியவரை பிடித்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் உதவியோடு அந்த முதியவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவரிடமிருந்து 19 ஆயிரம் மதிப்பிலான போலி 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை விரட்டி பிடித்த பெண்மணிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.