கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை கைது செய்த போலீசார் அவர்கள் அளித்த தகவலின் அடிப்பையில் மேலும் 30 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மணலி அருகே உள்ள புதுநகரில் ஒரு வீட்டில் வைத்து கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை போலீசார் கடந்த 12ஆம் தேதி பிடித்துள்ளனர். இதன் பிறகு அங்கிருந்த 16 லட்சம் கள்ளநோட்டுகள், 3 கலர் பிரிண்டர்கள் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்த போலீசார், புதுநகரை சேர்ந்த யுவராஜ்(37), திருவொற்றியூரை சேர்ந்த ஜான்ஜோசப்(31), செங்குன்றத்தை சேர்ந்த(46), மண்ணிவாக்கத்தை சேர்ந்த பிரபாகரன்(33), பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இம்தியாஸ்(24), வியாசர்பாடியை சேர்ந்த ரசூல்கான்(38) ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை புழல் சிறையில் அடைத்திருந்த நிலையில் தற்போது யுவராஜ், இம்தியாஸ், ரசூல்கான் ஆகிய 3 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இன்னும் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் வண்ணாரபேட்டையில் எங்களுக்கு சொந்தமான ஆட்டோ ஒன்றின் இருக்கைக்கு அடியில் இருப்பதாக தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் கூறிய ஆட்டோவில் சோதனை செய்தபோது சுமார் 30 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் யுவராஜ் உள்ளிட்ட 3 பேரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.