கள்ள நோட்டு மோசடியில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேண்டுராயபுரம் பகுதியில் விவசாயியான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரை தேனி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எனக்கு தெரிந்த ஒரு கும்பல் 1 லட்ச ரூபாய் கொடுத்தால் 3 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுப்பார்கள் என்று கூறி காளிமுத்துவிடம் சில 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். இதுகுறித்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் காளிமுத்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் முதலில் நல்ல ரூபாய் நோட்டுகளை கள்ளநோட்டுகள் என்று கொடுத்து சம்பந்தப்பட்டவர்களை நம்ப வைக்கின்றனர். அதன் பிறகு அவர்களிடம் இருக்கும் லட்சக்கணக்கான பணத்தை பெற்று கொண்டு அதற்கு பதிலாக கட்டுக்கட்டாக கருப்பு ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சீமைச்சாமி, சரவணன், மருது, சங்கரபாண்டியன், காளிராஜன் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் இந்த மோசடி கும்பல் பல பேரிடம் இருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.