கூலித்தொழிலாளி அரசு மருத்துவமனை கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரங்கூர் பகுதியில் கூலி தொழிலாளியான ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டில் இருக்கும் பாட்டி வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காசநோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ராமருக்கு நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராமர் கழிவறைக்கு செல்வதாக கூறிச் சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது ராமர் ஜன்னல் கம்பியில் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராமரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.