சிறுவர்கள் பள்ளிக்கூட கழிப்பறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முள்ளம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 15 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என இரண்டு பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிக்கூடத்தில் இருக்கும் கழிப்பறையை மாணவ-மாணவிகள் சுத்தம் செய்வதுபோல சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் ஒருவர் நீங்கள் ஏன் கழிப்பறையை சுத்தம் செய்கிறீர்கள் என மாணவரிடம் கேட்டதற்கு, அந்த சிறுவன் நான் 4-ஆம் வகுப்பு படிக்கிறேன் எனவும், பள்ளிக்கு முதலில் வருபவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும் என்று ஆசிரியை கூறியதாகவும் தெரிவித்துள்ளான்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைப்பது சரியா? தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து செய்ய வேண்டிய வேலையை சிறுவர்களிடம் ஒப்படைப்பது மிகவும் தவறு. எனவே கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.