கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் கிராமத்தில் கழிப்பறை வசதி இல்லை. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் குழுமூர் துங்கபுரம் சந்திப்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கருவேல மரங்கள் சூழ்ந்த பொதுவெளியில் இயற்கை உபாதை கழித்து வந்தோம். ஆனால் அந்த நிலத்தின் உரிமையாளர் தற்போது கருவேல மரங்களை அகற்றி வேலி அமைத்து விட்டதால் மிகவும் சிரமப்படுகிறோம்.
எனவே கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.