பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் ஐம்பொன் சிலைகள் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பேருந்து நிலைய வளாகத்தில் இருக்கும் கழிப்பறை கட்டிடத்தில் ஒரு சாக்குப்பை கிடந்துள்ளது. அந்த சாக்குப்பையில் பழமை வாய்ந்த 4 ஐம்பொன் சிலைகள், பழங்கால மடக்கு கத்தி போன்றவை இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கும், வருவாய்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் 4 ஐம்பொன் சிலைகளையும், கத்தியையும் மீட்டனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மர்ம நபர்கள் கோவிலில் இருந்து கடத்தி வந்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஆய்வு செய்த பின்னரே சிலைகளின் உண்மையான மதிப்பு தெரியவரும் என காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிலைகளை பொது கழிப்பறையில் மறைத்து வைத்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.