Categories
மாநில செய்திகள்

கழிவறையில் மாணவர்களுக்கு சமையல்…. பள்ளியில் தொடரும் அவலநிலை…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மதாத்தனூர் கிராமத்திலிருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 2015ம் வருடம் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் துவக்கப்பள்ளி அதே இடத்திலும் உயர்நிலைப்பள்ளி கிராமத்திற்கு அருகில் குறிப்பிட்ட தொலைவில் 1 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புது கட்டிடம் கட்டப்பட்டு அமைக்கப்பட்டது. கடந்த 2019ம் வருடம் அப்போதைய முதலமைச்சர் இபிஎஸ் அவர்களால் இப்பள்ளி திறந்து வைக்கப்பட்டது.

அன்று முதல் பள்ளிகள் தனித் தனியாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அணு சோனை, ஜெக்கேரி, ஒன்னுகுறிக்கி, இருதாளம், காலேப்பள்ளி போன்ற கிராமங்களை சேர்ந்த 300 ஏழை-எளிய மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதற்கிடையில் பள்ளிக்கூடம் கட்டியபோது சமையல் செய்வதற்காக தனித் தனியாக சமையற்கூடம் கட்டவில்லை. இதனால் பள்ளிக்கு பின்புறமாக கழிவறைக்கு என பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிட உட்பகுதியை மாற்றியமைத்தும், இட நெறுக்கடியில் முன்புறமாக ஷீட் அமைத்தும் செப்டிக் கழிவுநீர் தொட்டி அருகிலேயே மாணவர்களுக்கு சமையல் செய்யும் அவலநிலை தொடர்கிறது.

அவ்வாறு சமைத்த கையோடு சூடான சத்துணவை சமையல் பணி உதவியாளர்கள் சும்பாடு வைத்து தலைமீது சுமந்துசென்று மாணவர்களுக்கு பரிமாறுகின்றனர். இது தொடர்பாக பல முறை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் முறையிட்டும் 3 வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் கொண்டுவரப்பட்ட நமது நாட்டில் தான், பள்ளிக்கூடங்களுக்கு சமையல் கூடம் இன்றி கழிவறையில் சமைக்கும் நிலையும் தொடர்கிறது என்பது வேதனையை அளிக்கிறது.

Categories

Tech |