கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வசித்து வந்தவர் முத்துக்குமரன்(28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் ஆவடி அடுத்துள்ள பருத்திப்பட்டு என்.எஸ்.கே.கார்டன் தர்மராஜா தெருவை சேர்ந்த அண்ணன் ஜெயமுருகன் வீட்டில் தங்கி, அதே பகுதியில் அசோக் நிரஞ்சன் நகரில் இருக்கின்ற 4 மாடிகளில் 118 வீடுகளை கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருக்கின்ற சுமார் 20 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் மூன்று அடி அகலத்தில் வைத்திருந்த இரும்பு மூடியைத் திறந்து உள்ளே இறங்கி உள்ளார். அப்போது அந்த தொட்டிக்குள் ஒரு அடி மட்டுமே கழிவுநீர் இருந்த நிலையில், விஷவாயு தாக்கி முத்துக்குமரன் உள்ளேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளர் குணசேகரன்(39) விரைந்து சென்று முத்துக்குமரனை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அப்போது அவரையும் விசவாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரும் உள்ளே மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து குடியிருப்புவாசிகள் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு மேலே கொண்டு வந்துள்ளனர்.
அதன் பின் இருவரையும் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துக்குமரன் பரிதாபமாக இறந்துள்ளார். சுயநினைவு இல்லாமல் இருந்த குணசேகரன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து முத்துக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று சென்னை கொளத்தூர் கெங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் திருவேங்கடம்(56) என்பவர் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மாதவரத்தில் உள்ள குப்பை கிடங்கில் குப்பையை தரம் பிரிக்கும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.