ஜார்கண்டில் கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளிவந்த நச்சு காற்றை சுவாசித்ததால் 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஜார்கண்டின் தியோகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திர பர்ன்வால். இவர் தனது வீட்டில் 20 அடி ஆழமும் 7 அடி அகலமும் கொண்ட கழிவுநீர்த் தொட்டி ஒன்றை கட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அந்தத் தொட்டியின் கட்டுமான பணியை செய்து கொண்டிருக்கும் பொழுது, அதிலிருந்து வெளிவந்த நச்சுக்காற்று சுவாசித்த பர்ன்வால் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். முதலில் இந்த கட்டுமானப் பணியை தொடங்க லீலு முர்மு தொட்டியின் மூடியை எடுத்து விட்டு உள்ளே இறங்கியுள்ளார். உள்ளே சென்றவரின் குரல் எதுவும் வெளியில் கேட்காததால் சந்தேகத்தின் அடிப்படையில் பிரஜேஷ் சந்திர பர்ன்வால், மிதிலேஷ் சந்திர பர்ன்வால், கோவிந்த் மஞ்சி, லாலு மஞ்சி, இவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக தொட்டிக்குள் இறங்கியுள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தேவிபூரின் வட்டாட்சியர் சுனில் குமார் கூறுகையில்,” நாங்கள் தொட்டியை உடைத்து பார்த்தபோது 6 பேர் மயக்கமடைந்த நிலையில் தரையில் கிடந்தனர். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் மூச்சுத்திணறலால் அவர்கள் 6 பேரும் உயிரிழந்ததாகவும் அவர்கள் கூறினர். இதுபற்றி தியோகர் மாவட்ட துணை ஆணையர் கமலேஸ்வர் பிரசாத் சிங் கூறுகையில்,” பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் இறப்புக்கான உண்மையான காரணத்தை அறிய முடியும்” எனக் கூறினார்.