கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஈஞ்சம்பாக்கம் சேஷாத்ரி அவென்யூவில் இருக்கும் ஒரு வீட்டில் கழிவுநீரை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சுமார் 10 அடி ஆழமுள்ள தொட்டியில் இருந்த கழிவுநீரை ஓட்டுநர் முத்துக்குமார், கிளீனர் கதிரவன் போன்றோர் மோட்டார் மூலம் லாரிக்கு ஏற்றி கொண்டிருந்தனர். இதனை அடுத்து கிளீனர் கதிரவன் தொட்டிக்குள் இறங்கி இரும்பு கம்பியால் கழிவுநீரை கலக்கிய போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியது. அவரை காப்பாற்ற முயன்ற போது முத்துக்குமாரையும் விஷவாயு தாக்கியதால் அவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக முத்துக்குமார் மற்றும் கதிரவன் ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் முத்துக்குமாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.