இந்திய விஞ்ஞானிகள் கழிவு நீர் மாதிரிகளை பயன்படுத்தி கொரோனா ஆய்வு ஒன்றை நடத்தி அசத்தியுள்ளனர்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை தடுப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்தியாவும் தீவிரமாக ஆய்வுகள் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் நிறுவனம், இந்திய ரசாயன தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் கழிவு நீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு ஒன்றை நடத்தி அசத்தியுள்ளனர். பொதுவாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், மூக்கு மற்றும் வாய் வழியாக மட்டுமல்லாமல் மலம் வழியாகவும் கொரோனா தொற்றை வெளியிடுகிறார்கள். அதனால் குறிப்பிட்ட பகுதிகளில் கொரோனா பரவுவதை மதிப்பிடுவதற்கு கழிவு நீர் மாதிரிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தியிருக்கின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காண்பதிலும், தொற்றுநோயை கட்டுப்படுத்துவதிலும், பரவலை மதிப்பிடுவது மிக முக்கியமாக கருதப்படுகிறது. ஹைதராபாத்தில் இருக்கின்ற கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவு நீர் மாதிரிகளை பெற்று விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் அங்குள்ள 80 சதவீத கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில் 2 லட்சம் பேர் வைரஸ் பொருட்களை வெளியேற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் 40 சதவீத கழிவு நீர் மட்டுமே கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களை வந்தடைகிறது. இந்த தரவுகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த பயன்படுகின்றது. அவ்வகையில் ஏறத்தாழ இந்த எண்ணிக்கை 6.6 லட்சமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.