ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் அண்மையில் பொதி சுமக்க பயன்படுத்திய கழுதைகளை மேய்ச்சலுக்கு விட்டபோது பல்வேறு இடங்களில் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 70-க்கும் மேற்பட்ட கழுதைகள் காணவில்லை. இதுதொடர்பாக கழுதையின் உரிமையாளர்கள் சிலர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் முதலில் இந்த புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாக கழுதையின் உரிமையாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து காவல் நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை 15 கழுதைகளை கண்டுபிடித்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அடையாள அணிவகுப்பை நடத்தியுள்ளனர். அவ்வாறு ஒப்படைக்கும் போது உரிமையாளர்கள் தங்களுடைய கழுதைகளை பிங்கு பபுலு என்று பெயர் சொல்லி அழைத்து இருக்கின்றனர். அதற்கு எந்தக் கழுதைகளும் மறுமொழி தெரிவிக்கவில்லை. இதனால் இவை எங்களுடைய கழுதைகள் அல்ல என்று கூறி கழுதை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். அதாவது உரிமையாளர்கள் தங்கள் கழுதைகளுக்கு பெயர் வைத்து அழைத்து பழக்கப்படுத்தியுள்ளது காவல்துறையினருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இதனால் காணாமல் போன கழுதைகளை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
உரிமையாளர்களின் அலட்சியத்தாலே கழுதைகள் காணாமல் போயிருப்பதாகவும், கழுதைகள் ஒரே மாதிரி இருப்பதால் அவற்றை கண்டுபிடித்து மிகவும் கடினமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையில் மறுபுறம் தங்களுடைய கழுதைகள்தான் வேண்டும் என்று உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும் வேறு கழுதைகள் வேண்டாம் என்றும் கழுதைகள் கிடைக்கவில்லை என்றால் பெரும் போராட்டம் நடைபெறும் என்றும் உரிமையாளர்கள் எச்சரித்துள்ளது காவல்துறைக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.