பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பூந்தோட்டம் ரயில்வே காலனியில் பெயிண்டரான சுந்தரம்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலா(34), லட்சுமி(30) என்ற இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர். இதில் கலாவுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கலா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதில் 2-வது மனைவி லட்சுமிக்கு 2 மகன்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் சுந்தரத்திற்கும், லட்சுமிக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. நேற்று காலை லட்சுமியின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் லட்சுமி சடலமாக கிடந்ததை பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்தி விசாரணையில், மதுபோதையில் சுந்தரம் லட்சுமியுடன் தகராறு செய்து அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தலைமறைவாக இருக்கும் சுந்தரத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.