மருத்துவமனைகளில் செவிலியர்கள் இல்லாததால் உறவினர்களே கொரோனா நோயாளிகளை கவனித்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அவர்களின் சொந்த உறவினர்களே பணிவிடை செய்யும் அவலம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனையில் செவிலியர்கள் போதுமான அளவில் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக நடைபெற்று வரும் போர் காரணமாக அங்கு சுகாதார வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் அங்கு தென்படவில்லை.
மருத்துவமனையில் போதுமான செவிலியர்களும் இல்லை என்பதால் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அவர்களின் உறவினர்களே அவர்களை பராமரித்து வருகிறார்கள். பணிவிடை செய்வதற்கு கவச உடைகள் கூட இல்லை. இதில் சிலர் கவசம் கூட அணியாமல் மருத்துவமனைக்குள் வருகிறார்கள். மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு வருகிறது. எனவே அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் திருடுபோக வாய்ப்பு இருப்பதால் நோயாளிகளின் உறவினர்கள் அதன் அருகிலேயே இருந்து காவல் காக்கும் அவலமும் அங்கு ஏற்பட்டிருக்கிறது.