Categories
மாநில செய்திகள்

கவலைப்படாதீங்க…. நான் இருக்கேன்… தந்தையாக உங்களை காப்பேன்… நம்பிக்கையூட்டிய முதல்வர் …!!

பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்ய வேண்டாம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள காணொளி செய்தியில்  வாழ்ந்து காட்டுவதன் மூலமாக தான் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரமுடியும் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய முக.ஸ்டாலின், சமீப காலமாக நான் அதிகம் கேள்விப்பட்ட செய்தி ஒன்று என்னை அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகி கொண்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தியும் கேள்விப்படும்போது உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவமானமாக இருக்கிறது.

அறத்தையும், பண்பாட்டையும் அதிகம் பேசுகின்ற ஒரு சமூகத்தில், கல்வியிலும் –  வேலைவாய்ப்பிலும் முன்னேறும் ஒரு நாட்டில், அறிவியலும் – தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட கேவலமான அருவருப்பான செயல் களும் நடக்கத்தான் செய்கிறது என்பது  வெட்கி தலைகுனிய வைக்கிறது. இதை பற்றி பேசாமல் இருக்க முடியாது,  இருக்கவும் கூடாது.

விட்றாதீங்க அப்பா என அந்த குழந்தைகள் கதறுவது என் மனசுக்குள்ள ஒலிக்குது. இப்படியான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் அதைப் பற்றி வெளிப்படையாகப் புகார் கொடுப்பதற்கு முன் வரவேண்டும். பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் கிட்ட, சக அதிகாரிகள் கிட்ட, நிர்வாகத்துக்கு புகார் தரணும். அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அவங்களும் தயங்கக்கூடாது.

பள்ளிக்கூட பெயர் கெட்டுப் போய்விடும் என்று பள்ளி நிர்வாகமும், தனது மகளுக்கு நடந்த விஷயம் வெளியில் சொன்னால் ஊரார் தப்பாக பேசுவார்கள் என்று பெற்றவர்களும் நினைக்க கூடாது. அப்படி செஞ்சா அது உங்களுடைய பிள்ளைகள் எதிர்காலத்தில் நீங்கள் செய்கின்ற மாபெரும் துரோகம் ஆகிவிடும்.

சில நாட்களுக்கு முன்னர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தைகளுக்கான கொள்கை 2021 என்கின்ற கொள்கையை  தலைமைச் செயலகத்தில் நான் வெளியிட்டேன். ஒவ்வொரு குழந்தைகளையும் எல்லாவிதமான சுரண்டலில் இருந்தும் வன்முறைகளில் இருந்து காக்கும்  அறிக்கையாக அது இருக்கு.

குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு காட்டுகின்ற அதே அக்கறையைக் பள்ளி கல்லூரி நிர்வாகங்களும் காட்டும். தங்களுடைய குழந்தைகளின்  பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்தாகவேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு  எளிமையாகவும், இனிமையாகவும் பழக வேண்டும்.

ஒரே வீட்டுக்குள்ள தனித்தனி தீவுகளாக வாழ வேண்டாம். அன்பு குழந்தைகளே உங்களை  பாதுகாப்போடும் வளர்க்கும் கடமை எங்களுக்கு இருக்கு. ஒரு முதலமைச்சராக மட்டுமல்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களை காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கு.

தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு பெண் குழந்தை தற்கொலை செய்து கொள்வது என்றால் அவர் இந்த சமூகம் மொத்தத்தையும் குற்றம் சாட்டிவிட்டு மரணம் அடைகிறது என்று பொருள். வாழ்ந்துதான் போராடவேண்டும்.

வாழ்ந்து காட்டுவது மூலமாகத்தான் உங்கள்கிட்ட அத்துமீறலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரமுடியும். அதனால யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என ஒரு தந்தையாக, சகோதரனாக குடும்பத்தில் ஒருத்தனா கேட்டுக்கொள்கின்றேன். உங்கள பாத்துக்க நாங்க  இருக்கோம்,  நான் இருக்கேன், அரசாங்கம் இருக்கு என தெரிவித்தார்.

Categories

Tech |