தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 4 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குரிய உத்தரவுகளை பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்து வருகிறது. இதில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஓராண்டுக்கான பணியை முடித்து இருந்தால் இடம் மாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். இத்தகைய விருப்ப இடம் மாறுதல் கவுன்சிலிங் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்விச் சூழல் தலைகீழாக மாறிப்போனது. இதற்கிடையில் பல மாதங்களாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருந்தது.
ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங் ஒரு வருடமாக நடத்தப்படவில்லை. கொரோனா 2-வது அலை தாக்கத்துக்கு பின், நிலைமை படிப்படியாக சீரடைந்து வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டிற்கான இடமாறுதல் கவுன்சிலிங் அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் டிசம்பர் 31, 2021 முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பப் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பெரும்பாலான ஆசிரியர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கினர். ஒவ்வொரு பதவி நிலையிலிள்ள ஆசிரியர்களுக்கும் படிப்படியாக இடம் மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட இருக்கின்றன.
மேலும் பதவி உயர்வு குறித்த உத்தரவும் பிறப்பிக்கப்பட இருக்கிறது.
ஆசிரியர்கள் விருப்பமான இடங்களை கவுன்சிலிங் மூலமாக தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம். இதனிடையில் ஆசிரியர்களுக்கான பல்வேறு வகையான நிர்வாக மாறுதல் நடவடிக்கைகளும் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் நிர்வாக இடமாறுதல் நடைபெற்றால், ஆசிரியர்கள் விரும்பும் காலி இடங்கள் நிரம்பிவிடும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இது ஆசிரியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் என்பதால் நிர்வாக இடம் மாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே ஆன்லைன் மூலமாக விருப்ப இடம் மாறுதல் கவுன்சிலிங் நடைபெற்று முடியும் வரை நிர்வாக மாறுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இடையில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விருப்ப இடம் மாறுதல் கவுன்சிலிங்கிற்காக ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர். அதேநேரம் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் இடம் மாறுதல் கவுன்சிலிங்கிற்கு சிக்கல் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே தற்போதைய சூழலில் ஆன்லைன் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் எந்தவொரு சிக்கலும் இல்லை என்றே அதிகாரிகள் தரப்பு தரும் விளக்கமாக உள்ளது.