தேவகோட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரசினர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதால் 4 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர்.
தேவகோட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்எல்ஏ கே ஆர் ராமசாமி, காரைக்குடி தொகுதி எம்எல்ஏ மாங்குடி, திருவாடனை தொகுதி எம்எல்ஏ மற்றும் தேவகோட்டை நகர வட்டார வட்டார நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர். அப்பொழுது அங்கு உள்கட்சி பிரச்சனை காரணமாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகிகளின் விவாதத்தின்போது, நிர்வாகிகள் பலரும் ஒரே நேரத்தில் பேசியதால் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. அச்சமயம் அங்கு இருந்த ஒருவர் மீது செருப்பு வீசப்பட்டதால், அவர் செருப்பு வீசியவரை தாக்கியதால் அங்கே இருந்த சிலருக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கைகலப்பானது பின்னர் கோஷ்டி மோதலாக மாறியது. இதனால் 2 பேருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் இருவரும் காயமடைந்துள்ளனர். தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் நால்வரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளை அலுவலகத்திலிருந்து வெளியே அப்புறப்படுத்தினார். இச்சம்பவமானது தேவகோட்டையில் நேற்று மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.