காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மறைந்த அகமது பட்டேலின் மகன் பைசல் பட்டேல் காங்கிரசின் தொடர்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தை சேர்ந்த பைசல்பட்டேலின்(41) இந்த முடிவு சிதைந்துபோன நிலையில் உள்ள பழம்பெரும் காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு அடியாக கருதப்படுகிறது. காங்கிரசின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் சிறப்பான ஆற்றல் பொருந்திய அகமது பட்டேலின் மகன் தான் பைசல் படேல் ஆவர். காந்தியடிகளின் தீவிரமான விசுவாசியான அகமது பட்டேல் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எந்த நெருக்கடியையும் எதிர்கொள்பவராக விளங்கினார். கட்சித்தலைவர் சோனியா காந்தியிடம் நெருங்கிய நட்புகொண்ட அகமது பட்டேல் சென்ற 2020ஆம் வருடம் இயற்கை எய்தினார்.
பின் அவரது மகன் பைசல் எந்த அரசியல் கட்சியிலும் சேராது காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை கொண்டிருந்தார். முதல் முறையாக அரசியலில் களம் காணவுள்ள பைசல், காங்கிரஸ் தலைமையிடம் இருந்து இதுவரையிலும் எந்த அழைப்பும், அறிகுறிகளும் தென்படாததால் அவர் அதிருப்தியில் இந்த முடிவுக்கு வந்துள்ளார் என்று தெரிகிறது. ஆகவே விரைவில் இந்த வருட சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில் அவர் வேறு கட்சியில் இணைந்து அரசியல் களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காங்கிரசின் நாடாளுமன்றக் கட்சிக்கூட்டத்திற்குப் பின் நேர்ந்துள்ளது. பைசல் தவிர பல்வேறு மூத்த கட்சி தலைவர்கள் (ஜி-23 என அழைக்கப்படுபவர்கள்) கட்சித் தலைமையில் சீர்திருத்தம் செய்வதற்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக கட்சியின் சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பின் கட்சித் தலைமையில் சீர்திருத்தத்திற்கான கோரிக்கையை முன்னெடுத்துள்ளனர். கட்சி தலைமை தன் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத காரணத்தால் அவர் அதிருப்தியில் இம்முடிவுக்கு வந்துள்ளாரா (அல்லது) வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இதில் காங்கிரஸ் கட்சி சென்ற காலங்களில், அதன் பல தலைவர்கள் பாஜகவுக்கு கட்சி மாறுவதைக் கண்டுள்ளது. இப்போது அதன் ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் பைசல் பட்டேல் டுவிட்டரில் “காத்திருந்து சலித்துவிட்டது என்றும் மேலிடத்திலிருந்து எந்த ஊக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் என் விருப்பங்களைத் திறந்து வைத்து விட்டேன்” என பதிவிட்டுள்ளார்.