சூரிய ஒளி தகடு ஊழல் வழக்கில் பரபரப்பாக பேசப்பட்ட சரிதாநாயரை போன்று இப்போது தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
வளைகுடா நாட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரக தூதரக பெயரில் 30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக துணை தூதராக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் 20க்கும் மேற்பட்ட முறை வெளிநாட்டிலிருந்து தங்க கட்டிகள் கடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்க கட்டிகள் அடங்கிய பையை சோதனை உட்படுத்தாமல் டிப்ளமேடிக் சேனல் வழியே கடத்துவதை வழக்கமாக கொண்டு இருந்தது அம்பலமாகி உள்ளது.
ஸ்வப்னா:
இந்த கடத்தலின் மூளையாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாகி விட்டார்.சினிமா நடிகை போன்று இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், கேரள மாநில தகவல் தொழில்நுட்ப துறையின் ஸ்பேஸ் பார்க் நிறுவனத்தில் அதிகாரியாக பணி செய்தவர். பத்தாம் வகுப்பு கூட படிக்காத ஸ்வப்னா உயரதிகாரிகள் மூலம் பணியில் சேர்ந்துள்ளதாக அமெரிக்காவிலுள்ள ஸ்வப்னாவின் அண்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார். தம்மை இந்தியாவுக்கு வர விடாமல் ஸ்வப்னா மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனவங்களை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள் :
கேரள தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் சிவசங்கர் ஸ்வப்னாவை ஸ்பேஸ் பார்க் நிறுவனத்தில் பணியமர்த்தியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சிவசங்கரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் முதல்வரின் முதன்மைச் செயலாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மூலம் ஸ்வப்னா அடிக்கடி வெளிநாடு சென்று வந்ததும் தெரியவந்துள்ளது. முடவன் முகல் என்ற இடத்தில் உள்ள ஸ்வப்னாவின் ஆடம்பர வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் 6 மணி நேரம் சோதனை நடத்தினர். லேப்டாப், பென்டிரைவ், ஹார்ட்டிஸ்க், பழைய பாஸ்போர்ட், பாஸ்புக், முக்கிய ஆவணங்கள் அடங்கிய இரண்டு கோப்புகள் ஆகியவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கேரள சபாநாயகருக்குடன் தொடர்பு:
ஸ்வப்னாவின் வீட்டிற்கு IAS அதிகாரிகள் அடிக்கடி வந்து சென்றதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக முக்கிய சிசிடிவி காட்சிகளும் சிக்கி உள்ளன. மேலும் ஸ்வப்னா சந்திப் நாயர் என்பவருடன் சேர்ந்து கார்பன் டாக்டர் என்ற பெயரில் கார் இன்ஜினில் இருந்து கார்பனை நீக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஸ்வப்னாவும், சரித்தும் பங்குதாரர்களாக உள்ளனர். அந்த நிறுவன திறப்பு விழாவில் கேரள சபாநாயகர் கலந்து கொண்டதும் சர்ச்சையாகி உள்ளது.
தலைமை செயலக அதிகாரிகள் அழுத்தம்:
கார்பன் டாக்டர் நிறுவன அதிபர் சந்திப் நாயர் தலைமறைவாகி விட்டார். அவரது மனைவி சௌமியா சுங்க அதிகாரிகள் சுங்கத்துறை அதிகாரிகள் பிடியில் உள்ளார். ஸ்வப்னாவின் அழகில் ஏராளமானோர் விழுந்துள்ளனர். டிப்ளமேடிக் சேனல் வழியே வந்த தங்கக்கட்டிகள் அனைத்தும் அடங்கிய பையை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றபோது அதனை சோதிக்க வேண்டாம், அப்படியே ஒப்படையுங்கள் என திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்திலிருந்து அமைச்சர்களின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.கொச்சி, டெல்லி, மும்பையிலிருந்தும் சுங்கத்துறை அதிகாரிகள் பேசியுள்ளனர். அவை அனைத்தும் ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளன.
தீர்த்துக்கட்ட கூலிப்படை:
ஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகியோர் கூட்டாக சென்னைக்கு தப்பி வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அரசியல் புள்ளிகள் மற்றும் சினிமா உலக தொடர்பு ஸ்வப்னாவுக்கு அதிகம் உள்ளது. ஸ்வப்னா பிடிபட்டால் தங்கள் ரகசியம் அம்பலம் ஆகி விடக்கூடாது என கருதும் சிலர், ஸ்வப்னாவை தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவி உள்ளதாகவும், சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் ஸ்வப்னா மறைவிடத்தை கண்டு பிடிக்க சிபிஐ, NIA மற்றும் ரா உதவியை சுங்கத்துறை நாடியுள்ளது. இதுதவிர மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், அமலாக்கத் துறையினர் களம் இறக்கப்பட்டு உள்ளனர். அதனால் ஸ்வப்னா வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் முன்ஜாமீன் பெற முயற்சித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சி:
கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு காலத்தில் சூரிய ஒளி தகடு முறைகேடு விவகாரம் அம்பலமானது. முதல் அமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் புள்ளிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட சரிதா நாயர் என்ற பெண், சூரிய ஒளி ஒளி தகடு முறைகேட்டில் ஈடுபட்டு பல கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி தோல்வியின் காரணமாக அமைந்தது.
சிக்கலில் கம்யூனிஸ்ட் அரசு:
இதே பாணியில் தங்க கடத்தல் விவகாரத்தை கையில் எடுத்து பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தக் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இரண்டு விவகாரங்களும் அழகான இரண்டு பெண்களை மையமாகக் கொண்டவை என்பதால் பரபரப்பில் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்ற நிலை இருக்கிறது