தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை கண்டித்து அக்கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் ராஜினாமா செய்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து காமராஜ் ராஜினாமா செய்தார். கடந்த ஒரு வாரமாக தமிழக காங்கிரஸில் ஏற்பட்ட பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதாவது கடந்த 15ஆம் தேதி சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் ரஞ்சன் குமார் ஆகிய இருவரின் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் தான் ராஜினாமாவிற்கு காரணம். இந்த மோதல் குறித்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் எஸ்.சி பிரிவு அணி தலைவரான ரஞ்சன் குமார் ஆகிய இருவரும் நவம்பர் 24ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே கே எஸ் அழகிரி தான் இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என ஏற்கனவே 15 வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நெல்லையில் நேற்று ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். கே எஸ் அழகிரியை மாற்றம் செய்ய வேண்டும் என கேட்டு இருந்தனர். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை கண்டித்து, காங்கிரஸில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார் காமராஜ்.