காசிக்கு புனித யாத்திரை செல்லும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் மந்திரி சசிகலா ஜோலே தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், இந்து சமய அறநிலை துறை மந்திரி சசிகலா ஜோலே பெங்களூருவில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு புனித யாத்திரை சென்று வர வேண்டும் என்பது மக்களின் கனவாக உள்ளது. ஆனால் பொருளாதார நிலை காரணமாக பலர் செல்ல முடிவதில்லை. அத்தகைய பக்தர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு உள்ளது.
கர்நாடகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காசி புனித யாத்திரை சென்று வருகிறார்கள். அப்படி காசிக்கு யாத்திரை மேற்கொள்பவர்கள் 30,000 பேருக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்” என்று சசிகலா ஜோலே தெரிவித்துள்ளார்.