Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காடு உருவாக்கிய வன நாயகன்…. தனி மனிதனாக சாதித்த இளைஞர் …!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இளைஞர் ஒருவர் ஆக்‍கிரமிப்பாளர்களிடமிருந்து சுமார் 25 ஏக்‍கர் நிலத்தை மீட்டு தனி ஒரு மனிதனாக போராடி வனப்புமிக்‍க காட்டை உருவாக்‍கி சாதித்துள்ளார்.

குடியாத்தம் அருகே பாலாற்றங்கரையோரத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சிறிய காட்டில், முயல்களும், மான்களும், காட்டுப் பன்றிகளும் சுற்றித் திரிந்த ஒரு காலம் இருந்தது. பின்னாளில் ஆக்‍கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்‍கிய அந்த வனம் படிப்படியாக அழிக்‍கப்பட்டு சுடுகாடுபோல் மாறியது. அதைக்‍ காணப் பொறுக்‍காமல் களத்தில் இறங்கினார் பட்டதாரி இளைஞர் ஸ்ரீகாந்த். வாத்தியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அவர், சினிமாவில் சாதிக்‍கும் லட்சியக்‍கனவோடு சென்னை வந்த வேளையில், குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு சோக நிகழ்வு காரணமாக மீண்டும் சொந்த ஊர் திரும்பினார்.

அதன்பிறகு அங்கிருந்து திரும்ப மனமின்றி தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்ட அவர், விபத்தில் உயிரிழந்த தனது சகோதரரின் நினைவாக வாத்தியார்பட்டி சாலை ஓரத்தில் சுமார் ஆயிரம் மரக்‍ கன்றுகள் நட்டு பராமரித்தார். அப்போது, அங்குள்ள பாலாற்றங்கரை ஆக்‍கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்‍கி சுடுகாடாய் மாறுவதை காணப் பொறுக்‍காமல் பொங்கி எழுந்தார். அதனை மீட்கும் முயற்சியில் துணிந்து இறங்கினார். மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்போடு ஆக்‍கிரமிப்பு பகுதி மீட்கப்பட்டு, அங்கு மீண்டும் காடு உருவாக்‍கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மரக்‍கன்றுகள் நட்டு பராமரிக்‍க 13 லட்சம் ரூபாய் ஒதுக்‍கப்பட்டு 30 பேருக்‍கு பணி வழங்கப்பட்டது. இதன்மூலம், நாவல், அரசு, புங்கன், வேம்பு, நீர் மருது, அத்தி என விதவிதமான மரங்கள் அங்கு ஆயிரக்‍கணக்‍கில் நடப்பட்டன. தனது கனவு உலகமான திரைத்துறையில் சாதித்து இருந்தால்கூட இவ்வளவு பெரிய மனத்திருப்தி கிடைத்திருக்‍காது என்றும், மரங்கள் வளர்ந்து காடு உருவாவதை பார்க்‍கும்போது, எல்லையில்லா உற்சாகம் கிடைப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் இந்த வன நாயகன். காடுகளை அழிக்‍கும் கயவர்களுக்‍கு மத்தியில், அதனை உருவாக்‍கும் உன்னத பணியை செய்து வரும் ஸ்ரீகாந்த், இக்‍கால தலைமுறையினருக்‍கு முன்மாதிரியாக திகழ்கிறார் என்பதை இங்கு அறுதியிட்டுக்‍ கூறலாம். இவர்போல் எல்லோரும் செயல்பட்டால், களர் நிலமும் வளர் நிலமாக மாறலாம்.

Categories

Tech |