பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(55) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சுரேஷ் என்ற மகனும், பத்மாவதி என்ற மருமகளும் இருக்கின்றனர். கடந்த 27-ஆம் தேதி கண்ணன், விஜயலட்சுமி, சுரேஷ், பத்மாவதி ஆகிய நான்கு பேரும் மாடுகளை காட்டிற்கு மேய்ப்பதற்காக ஓட்டி சென்றுள்ளனர். மதிய நேரத்தில் சுரேஷும், பத்மாவதியும் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தனர். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது தனது தாய் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்ததை பார்த்து சுரேஷ் அதர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
அங்கு சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக இறந்துவிட்டார். விஜயலட்சுமியின் பின் தலையில் இரும்பு ஆயுதங்களால் தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்தது. அவரது சங்கிலி மற்றும் தோடுகள் அகற்றப்படாமல் இருந்தது. எனவே நகைக்காக விஜயலட்சுமி கொலை செய்யப்படவில்லை என்பது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் கண்ணனிடம் விசாரணை நடத்திய போது, அவர் தனது மனைவி தாக்கப்பட்ட நேரத்தில் அருகில் இருக்கும் மற்றொரு காட்டில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.