காட்டுக்குள் இரண்டு நாட்களாக தங்கி இருந்த கேரள இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டரம்பள்ளியை அடுத்திருக்கும் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட ஜின்னுக்கா வட்டம் பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அவரிடம் விசாரித்த பொழுது கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. மேலும் அவர் தான் ஆராய்ச்சிக்காக இங்கு வந்ததாக கூறிவிட்டு காட்டுக்குள் சென்றார்.
பொதுமக்கள் காட்டுக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறி காட்டுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரித்தும் அவர் தன்னை பாதுகாப்பதற்கு ஆயுதங்கள் இருக்கின்றது என கூறிவிட்டு நேற்று முன்தினம் காலை காட்டுக்குள் சென்று நேற்று மாலை வரை வரவே இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.
இதன் பின்னர் ஆடு மேய்க்கும் ஒருவர் காட்டில் இருந்த கேரள இளைஞரை மடக்கி பிடித்து மலை அடிவாரத்திற்கு அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதன் பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது நசீர் என்பதும் சென்னையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு வாடகைக்கு கார் எடுத்து வந்ததாகவும் கூறினார். இதனால் போலீசார் அவரிடம் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.