காட்டுப்பகுதியில் வைத்து பெண்ணிற்கு பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளாமலை ஆதிவாசி காணி குடியிருப்பில் சுபாஷ் என்பவர் பசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீலேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஸ்ரீலேகாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்புலன்ஸ் பேச்சிபாறையிலிருந்து விளாமலைக்கு விரைந்து சென்றது. இதனை அடுத்து காட்டுப்பகுதி வழியாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோதே ஸ்ரீலேகாவிற்கு பிரசவ வலி அதிகரித்தது.
இதனால் செவிலியர் சரஸ்வதி ஆம்புலன்சில் வைத்தே பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு தாய்-சேய் இருவரையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சாதூர்யமாக செயல்பட்டு தாய்-சேய் இருவரையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் செவிலியரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.