யானையின் முன்பு கீழே படுத்து ஒருவர் கும்பிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளது. அப்போது கர்நாடக வனப்பகுதியில் இருக்கும் சாலையோரத்தில் ஆண் யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க நபர் கையில் தண்ணீர் பாட்டிலுடன் இறங்கியுள்ளார். அதன்பின் அந்த நபர் யானை நோக்கி நடந்து சென்றுள்ளார். இதனை பார்த்த வாகன ஓட்டிகள் யானை அருகே செல்ல வேண்டாம் என சத்தம் போட்டுள்ளனர். ஆனாலும் அந்த நபர் அதனை கண்டுகொள்ளாமல் யானை முன்பு சென்று உட்கார்ந்து கும்பிட்டு கீழே படுத்து வணங்கியுள்ளார்.
அதன்பின் அந்த நபர் யானையை விரட்ட முயற்சி செய்துள்ளார். இதனால் கோபமடைந்த யானை அந்த நபரை நோக்கி வேகமாக ஓடி வந்த போதும் அவர் அங்கேயே நின்றுள்ளார். இதனையடுத்து யானை அந்த நபரின் மிக அருகில் வந்து நின்றுள்ளது. ஆனால் அவரை எதுவும் செய்யவில்லை. சிறிது நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து அந்த நபர் ரோடு பகுதிக்கு வந்துவிட்டார். இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது குடிபோதையில் இப்படி நடந்து கொண்டாரா என குழப்பமடைந்தனர். இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.