காட்பாடி சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகராட்சியின் சில பகுதிகளையும், திருவலம் பேரூராட்சியையும், 21 ஊராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. இங்கு 2,47, 428 வாக்காளர்கள் உள்ளனர். காட்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன். வேளாண்மை, நெசவு, கயிறு திரித்தல், பீடி சுற்றுதல் ஆகியவை இத்தொகுதியின் முதன்மை தொழில்களாக உள்ளன. இத்தொகுதியில் தாலுக்கா மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்பதும், அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
மேலும் இங்குள்ள படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்லும் நிலை உள்ளதால் வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வலியுறுத்தலாக உள்ளது. தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கக்கூடிய துரைமுருகன் இத்தொகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள், சர்க்கரை ஆலை, திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகம், முக்கிய சாலை கட்டமைப்பு வசதிகளை கொண்டு வந்தது ஆகிய திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்.
நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் இருந்தாலும் நிறைவேற்றப்படாத கோரிக்கையாக கிராமப்புறங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டுமென்றும், காங்கேயநல்லூர்-சத்துவாச்சாரியில் மேம்பாலம் கட்டித் தரவேண்டும் என்பது வெறும் அறிவிப்பாக இருந்து வருகிறது. மேலும் தொழில் வளர்ச்சி பணிகளும் செய்து தரவேண்டும் என்பதும், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள் கட்டி தரவேண்டும் என்பது நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவே உள்ளது. நீண்ட நாள் கோரிக்கைகளுடன் காட்பாடி தொகுதி மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.