காதலுக்கு உடந்தையாக இருந்ததாக நினைத்து பெண்ணின் உறவினர்கள் வாலிபரை அடித்து இழுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்குழி கிராமத்தில் வசிக்கும் வாலிபர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த வாரம் காதலர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். மேலும் சோழன்குடிக்காடு கிராமத்தில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் தலைமறைவானதற்கு உடந்தையாக ராஜேஷ் இருந்ததாக நினைத்து பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 5 பேர் இணைந்து ராஜேஷின் வீட்டிற்குள் நுழைந்து விட்டனர். அவர்கள் ராஜேஷை சரமாரியாக தாக்கி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராஜேஷின் உறவினர்கள் அப்பகுதியில் இருக்கும் கொட்டகையில் கட்டி போடப்பட்டிருந்த ராஜேஷை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிவண்ணன், ரஞ்சித், மணிமாறன், அஜித், வேல் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் 5 பேரும் இணைந்து ராஜேஷை அடித்து இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.