அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.தி.மு.க மாவட்ட நிர்வாகியாகவும், அய்யகோடு பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார். இவருக்கு சட்டக் கல்லூரியில் படிக்கும் லிபின் ராஜா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி லிபின் ராஜா கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் லிபின் ராஜாவின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து நேசமணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அந்த விசாரணையில் லிபின் ராஜாவுக்கும் அந்தபகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதில் லிபின் ராஜாவை மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த மர்ம நபர்கள் அஞ்சுகிராமம் வரை லிபின் ராஜாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு எங்கு சென்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பழவூர் பகுதியில் லிபின் ராஜா கொன்று புதைக்கப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று லிபின் ராஜாவை புதைத்ததாக கூறிய இடத்தில் இருந்து உடலை தோண்டி எடுத்துள்ளனர். இந்த உடலை அடையாளம் காட்டுவதற்காக லிபின் ராஜாவின் தந்தையை அழைத்து சென்றுள்ளனர். மேலும் தோண்டி எடுக்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.