கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 28-ஆம் தேதி சிறுமி திடீரென காணாமல் போனதால் பெற்றோர் நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அடிக்கடி சிறுமியுடன் செல்போனில் யார் பேசியுள்ளனர் என ஆய்வு செய்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது..
இதனையடுத்து போலீசார் தொழிலாளியையும், சிறுமியையும் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது தேங்காய் உரிக்கும் வேலைக்கு சிறுமியின் ஊருக்கு சென்றபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனால் தொழிலாளி சிறுமியை கடத்தி சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ளார். பின்னர் போலீசார் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.