செல்போன் கோபுரங்களை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் கோசலகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பிராஜெக்ட் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோசலகுமார் பணிபுரிந்து வரும் அந்த தனியார் நிறுவனம் கடந்த 2010-ஆம் ஆண்டு ஒத்தக்குதிரை, தண்ணீர்பந்தல் புதூர், நல்லகவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள செல்போன் கோபுரங்களை சுமார் 1 1/2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
இந்த செல்போன் கோபுரம் கடந்து 2017-ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்தது. அதன்பிறகு கோபுரங்கள் இயங்கவில்லை. இதனால் அந்த நிறுவன ஊழியரான கோபி என்பவர் செல்போன் கோபுரங்கள் குறித்து ஆய்வு செய்ய அப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த செல்போன் கோபுரங்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன செல்போன் கோபுரங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.